Header Ads

எந்த நாட்களில் கருத்தரிப்பு நிகழும்? புதிதாய் திருமணமானவர்கள் கவனிக்க!

 எந்த நாட்களில் கருத்தரிப்பு  நிகழும்?  புதிதாய் திருமணமானவர்கள் கவனிக்க!


புதிதாய் திருமணம் ஆனவர்களில் பலருக்கும் முதலில் ஏற்படும் பயம் மற்றும் கவலை கருத்தரிப்பு பற்றிதான். 

குழந்தை உண்டாகுமோ உண்டாகாதோ? என்ற தயக்கம். 

சரியான முறையில்தான் தாம்பத்யம் கொள்கிறோமா? இப்படி செய்தால் மட்டும் தான் குழந்தை பிறக்குமா? 

முதல் முயற்சியிலேயே கருத்தரிப்பு சாத்தியமா? இப்படி பல கேள்விகள்? குழப்பங்கள்!


இதற்காக இவர்கள் படிக்கும் புத்தகங்களும் இணைய பக்கங்களும் ஏராளம். நண்பர்கள் பல வித ஆலோசணைகளை கூறும் போதும் அதை விட புதிய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டாகின்றன! 

அதனால் உங்களை குழப்பாமல், திருமணமானவர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில தகவல்கள் மட்டுமே இங்கே பதியப்படுகிறது. 

எப்போது தாம்பத்யம் வைத்துக்கொண்டால் கருத்தரிப்பு சாத்தியம்? 

இதை அறிவதற்கு பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் நாட்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். சிலருக்கு 26 நாள் சுழற்சி சிலருக்கு 30 நாள் சுழற்சி என்று அது ஒவ்வொருவரையும் பொருத்து சிறிது வேறுபடும். 

இச்சுழற்சி நாட்களின் மையப்பகுதியில்தான் பெண்களின் கருமுட்டை முதிர்ந்து இணைசேர தயாரான நிலையில் இருக்கும். 

அதாவது எடுத்துக்காட்டாக 28நாள் சுழற்சி கொண்ட ஒரு பெண்ணுக்கு 14வது நாள் கருமுட்டை முழு வளர்ச்சியடைந்து இணை சேர தயாராக இருக்கும். இந்த கருமுட்டை 24 மணி நேரம் மட்டுமே காத்திருக்கும். இந்நேரத்தில் இணைசேர விந்தணு கிடைக்காத பட்சத்தில் அது அழியத்தொடங்கி 15வது நாள் முதல் 28ஆம் நாள் வரை அழிந்து உதிரப்போக்காக வெளியேறுகிறது. 

என்ன இந்த 24 மணி நேரத்தில் இணைசேர்ந்தால் மட்டும்தான் கருத்தரிக்க முடியுமா? 

ஆம்! ஆனால் இங்கே இன்னொரு தகவலையும் நீங்கள் அறியவேண்டும். பெண்ணின் உடலில் செலுத்தப்பட்ட ஆணின் விந்தனு 48-72மணி நேரம் வரை உயிர்வாழக்கூடியது. விந்தணுவின் அரோக்கியம் மற்றும் அது வாழும் உடலை பொருத்து அதன் வாழ்நாளின் கால அளவு மாறலாம். ஆனால் சராசரியாக இரண்டு நாட்கள் உறுதியாக உயிர்வாழும் என எதிர்பார்கலாம். 

அதனால் கருமுட்டை இணைசேர தயாராகும் காலத்தில் ஏற்கனவே செலுத்தப்பட்ட விந்தனு பெண்ணுடலில் உயிரோடு சுற்றிக்கொண்டிருக்கும் பட்சத்தில் தானாகவே அது இணைசேர்ந்து கருத்தரிப்பு நடைபெறும். 

அதாவது 14வது நாள் தயாராகும் கருமுட்டையுடன் இணைசேர 12ஆம் நாள் உடலுறவின் போது உள்ளே சென்ற விந்தணு போதுமானது. கருமுட்டை 24 மணி நேரம் மட்டுமே தயாராக இருக்கும் என்று பார்த்தோமே! அந்த 24 மணி நேரம் கழித்து அதாவது 15ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, தாம்பத்யம் கொள்வதில் கருத்தரிப்பு நிகழாது. அதைப்போல 1-10ஆம் நாள் வரை கருத்தரிக்க முடியாது.

இதில் ஒன்றாம் நாள் என்பது மாதவிடாய் வரும் முதல் நாளை குறிக்கிறது.
இதை LMP என்பர். (last menstrual period) எப்படியும் இந்நாட்களில் யாரும் தாம்பத்தியம் கொள்வது கிடையாது. சிலருக்கு மூன்று நாள் , சிலருக்கு ஐந்தாம் நாள் , ஆறாம் நாள் வரை கூட உதிரப்போக்கு இருக்கும் என்பதால் இயற்கையாகவே இந்த முதல் வாரத்தில் யாரும் ஆர்வம் கொள்வது இல்லை. 

இப்போது உங்களுக்கு புரிந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்த கருமுட்டை தயாராகும் நாள் சிலருக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக கூட நிகழலாம். அதனால் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது மாதவிலக்கின் மைய நாளான 14ஆம் நாளுக்கு முன்பு இரண்டு நாளும் அதன் பின்பு இரண்டு நாளும் கருத்தரிப்புக்கு மிக முக்கியம். அதாவது 12ஆம் நாள் முதல் 16ஆம் வரை மட்டுமே கருத்தரிப்புக்கு பிரகாசமான வாய்ப்பு.




நாம் மேலே கண்டது 28நாட்கள் சுழற்சியை கொண்டு கணக்கிட்டது. இது போல 30நாள் சுழற்சியின் மைய நாளான 15ஆம் நாளின் முன்னே இரண்டு நாட்கள் பின்னே இரண்டு நாட்கள் அதாவது 13 முதல் 17 ஆம் நாள் வரை வாய்ப்பு பிரகாசம். சிலருக்கு ஒவ்வொரு மாதமும் நாட்களின் சுழற்சி ஓரிருநாள் முன்னே பின்னே மாறுபடும் என்றால் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய வகையில் 11ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை முயற்சி செய்வது நல்லது.

சீரற்ற மாதவிடாய் சுழற்சி 

சிலருக்கு (Irregular Periods) மிகவும் தாமதமாக மாதவிடாய் வரும் பட்சத்தில் கருமுட்டை தயாராகும் மைய நாளை கண்டறிவது மிக கடினம். அதனால் மேற்கண்ட இந்த முறை சீரான சுழற்சி நாட்களை (Reggular Periods) கொண்டவர்களுக்கு மட்டுமே உதவும். 

அதனால் மேற்கண்ட கணக்கீட்டின் படி ஒரு மாதத்தில் சரியான ஓரிரு நாள் உடலுறவு கொண்டாலே எளிதாக கருத்தரிப்பு நிகழும். இந்த நாட்களை விட்டு விட்டு மற்ற நாட்களில் எவ்வளவு முயன்றாலும் கருத்தரிப்பு நிகழாது. பெண்ணின் கருமுட்டை முழுதும் வளர்ச்சியடையாத நிலையான மாதத்தின் முற்பகுதியிலும் , அழிந்து கொண்டிருக்கும் இருக்கும் தருவாயில் மாதத்தின் பிற்பகுதியிலும் இருப்பதால் இந்நாட்களை தவிர்த்து அதன் மையப்பகுதியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

No comments

Powered by Blogger.